டெல்லி அருகே 10 வயது சிறுமி சித்திரவதை.. சூடு வைத்த கொடூரம்.. கணவருடன் விமானியை கைது செய்து போலீசார் விசாரணை

 
Delhi

டெல்லியில் வீட்டு வேலை செய்து வந்த 10 வயது சிறுமி அந்த வீட்டு உரிமையாளர்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் துவாரஹா பகுதியில் வசித்து வருபவர் பூர்ணிமா பக்‌ஷி. தனியார் விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக பூர்ணிமா பணியாற்றி வருகிறார். அவரது கணவர் கௌசிக் பக்‌ஷியும் வேறு ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள 10 வயது சிறுமி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், வீட்டு வேலைகளை செய்ய சொல்லியும் அந்த சிறுமியை பூர்ணிமா சித்திரவதை செய்து வந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பூர்ணிமா வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஜே.ஜே.காலனியில் வசித்து வருகின்றனர். சுமார் 2 மாதமாக அச்சிறுமி பூர்ணிமா வீட்டில் பணி புரிந்து வந்தபோதிலும், சிறுமி சித்திரவதை செய்யப்படுவதை அவரது குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை.

இந்த நிலையில், சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர், சிறுமி வேலை செய்யும் வீட்டைக் கடந்து நேற்று வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, பால்கனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை பூர்ணிமா தாக்கியுள்ளார். இதனை கண்ட அவர், சிறுமியின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், பூர்ணிமாவின் வீட்டுக்கு வந்து இதுகுறித்து கேட்டுள்ளனர்.

Child Abuse

அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. பூர்ணிமாவையும் அவரது கணவரையும் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலையில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், பூர்ணிமாவையும் (33), அவரது கணவர் கௌசிக்கையும் (36) போலீசார் கைது செய்துள்ளனர். சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் கூறிய தகவலின்படி, சிறுமியின் முகம் வீங்கி, காயம் அடைந்திருந்தது. பூர்ணிமா அனைத்து வேலைகளையும் செய்ய வற்புறுத்தி சிறுமியை அடித்துள்ளார். தவறு செய்யும் போதெல்லாம் சிறுமிக்கு பூர்ணிமா சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் கைகளில் பல தீக்காயங்கள் உள்ளன.

இதுகுறித்து சிறுமியின் மாமா கூறுகையில், “சிறுமியின் கைகளிலும் உடலின் மற்ற பாகங்களிலும் தீக்காயங்கள் உள்ளன. அவள் கண்களிலும் காயங்கள் இருந்தன. சிறுமி மிகவும் மோசமான மனநிலையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் அவள் மிகவும் பயந்துபோயுள்ளார்.” என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மூன்று-நான்கு நாட்களாக பட்டினி கிடந்ததாகவும், சாப்பிடுவதற்கு பழைய உணவுகளே வழங்கப்பட்டதாகவும் சிறுமி தன்னிடம் தெரிவித்ததாக அவரது மாமா தெரிவித்துள்ளார்.


ஆனால், சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தீக்காயங்கள் பழையவை என்றும், மற்ற காயங்கள் புதியவை என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருடன் தங்கியிருந்த காலத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த ஒரு ஏழைக் குழந்தை மீதும் இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணியாதபடி அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

From around the web