மாற்று சமூக பெண்ணை மணந்த இளைஞர் ஆணவ படுகொலை.. பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்

 
Chennai

சென்னையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பட்டியலின வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லடம்பேட்டை பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பள்ளிக்கரணை பகுதியில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பெண் வீட்டாருக்கு ஷர்மி வேறொரு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஷர்மி காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஷர்மி பெற்றோர் பேச்சை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்டதால் அவரை பழிவாங்க எண்ணினர்.

Murder

இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றுள்ளார். பின்னர் மது அருந்தி விட்டு வெளியே வந்த பிரவீனை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pallikaranai-PS

முதற்கட்ட விசாரணையில் பிரவீன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடிவருகின்றனர்.

From around the web