மின்சார வேலியில் சிக்கி இளைஞர்கள் பலி.. போலீசாருக்கு பயந்து ஓடிய போது நிகழ்ந்த விபரீதம்.. கைதான வயல் உரிமையாளர்!

 
Kerala

கேரளாவில் போலீசாருக்கு பயந்து ஓடிய 2 இளைஞர்கள் வயலில் இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஷிஜித் (22) மற்றும் சதீஷ் (22) ஆகியோர் மீது அடிதடி வழக்குகள் காவல் நிலையில் நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், இவர்கள் பதுங்கியிருந்த இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Kerala

அதன்படி கடந்த திங்கள்கிழமை அன்று, அவர்கள் இருந்த இடத்துக்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை கண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அவர்களை காணாமல் போலீசாரும் காவல் நிலையத்துக்கு திரும்பியுள்ளனர். ஆனால், அப்படி தப்பி சென்ற இருவரும், ஆனந்தகுமார் என்பவரின் வயல் பகுதிக்கு சென்றபோது அங்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார் இறந்து கிடந்த இருவரின் உடலையும் பார்த்துள்ளார். தொடர்ந்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து அதன் காரணமாக இருவர் இறந்ததால் தன்மீது நடவடிக்கை பாய்ந்துவிடும் என பயந்த அனந்தகுமார், இரண்டு இளைஞர்களையும் வயலில் புதைத்துள்ளார். பின்னர் ஏதும் நடக்காதது போல அங்கிருந்து சென்றுள்ளார்.

Police-arrest

ஆனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் சோதனை நடத்தியதில், அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஷிஜித் மற்றும் சதீஷ் ஆகியோரின் சடலத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web