ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.. வேலை கிடைக்காமல் திருமணம் தடைபட்டதால் விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!
தாம்பரம் அருகே வேலை கிடைக்காமல் திருமணம் தடைபட்டதால் விரக்தியில் வாலிபர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கம்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் உயிரிழந்த வாலிபர் தாம்பரம் அடுத்து உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் 3-வது தெருவைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவருக்கும், உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருந்து வந்த அசோக், இருசக்கர வாகனத்தில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.