பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணை மர்ம நபர் பட்டாக்கத்தியால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை அயனாவரம் கே.எச்.சி சாலையில் இளம்பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வழிமறித்து, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இதனை தடுக்க முயன்ற போது அந்த இளம்பெண்ணையும் கையில் வெட்டியதாகவும், இதனால் உயிருக்கு அஞ்சிய அந்த இளைஞர் தன்னுடன் வந்த அந்த இளம் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ரத்த காயங்களுடன் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், இளைஞரை வெட்டிய அந்த மர்ம நபர் அந்த இளம் பெண்ணை தன்னுடன் வருமாறு மிரட்டியதை பொறுப்படுத்தாமல் அந்த இளம் பெண்ணும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் யார்? வெட்டு காயத்துடன் தப்பி சென்ற அந்த இளைஞர் மற்றும் இளம் பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த இளைஞர் மற்றும் இளம் பெண்ணை மர்ம நபர் பட்டாக்கத்தியால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.