ஊசியில் காற்றை நிரப்பி கொலை செய்ய முயன்ற பெண்.. காதலனை அடைய கள்ளக்காதலியின் பலே திட்டம்!

 
Kerala

கேரளாவில் காதலனை அடைய அவரது மனைவியை கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவல்லா புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சினேகா (25) என்பவர் பருமலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில் கடந்த வெள்ளிகிழமை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தது. அந்த நேரத்தில் சினேகாவின் குழந்தைக்கு நிற மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக டிஸ்ஜார்ஜ் செய்யவில்லை. சினேகாவும், அவரது தாயாரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தைக்காக காத்திருந்தனர் .

இந்த சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணி அளவில் நர்ஸ் வேடமணிந்த பெண் ஒருவர் இவர்களது அறைக்கு வந்து சினேகாவுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறியுள்ளார். சினேகாவின் தாயார் அதான் டிஸ்சார்ஜ் பண்ணியாச்சே இனிமே எதற்கு ஊசி என்று கேட்டுள்ளார். அதற்கு செவிலியர் வேடமணிந்த பெண்ணோ இல்லை இல்லை இன்னும் ஒரு ஊசி போட வேண்டி உள்ளது என கூறியவாறு சினேகாவின் கையைப் பிடித்து ஊசியை குத்த முயன்றுள்ளார்.

Kerala

ஆனால் ஊசியில் மருந்து இல்லாததை பார்த்த சினேகாவின் தாயார் உடனே சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர் வேடம் அணிந்த பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புலிக்கீழு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அந்தப் பெண் காயங்குளம் பகுதியை சேர்ந்த அனுஷா (25) என்பதும், இரண்டு முறை திருமணமானவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், சினேகாவின் கணவரின் கள்ளக்காதலி என்பதும் கல்லூரி காலம் முதலே இருவரும் நெருங்கி பழகி வந்ததும் தெரிய வந்துள்ளது.

women-arrest

மேலும், மருந்து கடைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ள அனுஷா மருந்தில்லாத காலியான ஊசியில் காற்றை நிரப்பி நரம்பில் செலுத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும் என்று தெரிந்தே தான் அந்த காலியான மருந்து ஊசியை சினேகாவுக்கு செலுத்த முயன்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சினேகாவின் கணவருக்கு தெரிந்துதான் அனுஷா இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது தன்னிச்சையாக ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web