திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சி.. விருதுநகரில் பயங்கரம்!
விருதுநகர் அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்துக்கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் 3வது மகள் பாண்டிசெல்வி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் இவருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.
இருவரும் தொலைபேசியில் அவ்வப்போது பேசி வந்த நிலையில், இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாண்டிசெல்வி குணசேகருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத குணசேகர், பாண்டிசெல்வியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.
அப்போதும் பாண்டிசெல்வி மறுப்பு தெரிவித்ததோடு, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் கூறியதால் குணசேகர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். இன்று தனது வீட்டு மாடியில் பாண்டிசெல்வி மற்றும் அவரது சகோதரி பாண்டீஸ்வரி ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிற்கு குணசேகர் வந்துள்ளார். அவர் பாண்டிசெல்வியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பாண்டிசெல்வி மீண்டும், மீண்டும் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த குணசேகர், தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து பாண்டிசெல்வி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தங்கை பாண்டிசெல்வி மீது தீ பற்றி எரிவதை கண்ட அவரது சகோதரி பாண்டீஸ்வரி அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் குணசேகர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருவர் மீதும் பற்றி இருந்த தீயை அணைத்த அவர்கள், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 22 சதவீத தீக்காயங்களுடன் பாண்டிசெல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாண்டிசெல்வியிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குணசேகரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.