பட்டப்பகலில் பெண் கழுத்து நெறிபட்டு கொலை.. கோவையில் அதிர்ச்சி!

 
Coimbatore

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு சேரன் மாநகர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி. இவர், பெயிண்டிங் ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இந்த தம்பதிக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி அன்னூரில் பெயிண்டிங் ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதால், காலையில் பணிக்குச் சென்றுவிட்டார்.

வழக்கமாக ஜெகதீஷ்வரி, மகள் கார்த்திகாவை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் பள்ளிச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவார். நேற்றும் அதே போல ஜெகதீஷ்வரி பள்ளிக்கு வருவார் என எண்ணி கார்த்திகா பள்ளியிலேயே காத்திருந்தார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீஷ்வரி வராததாலும், செல்போனை எடுக்காததாலும், கார்த்திகா நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார்.

Murder

வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஜெகதீஷ்வரி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா சத்தம் போட்டதால் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கணவர் சக்கரவர்த்திக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஜெகதீஷ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Peelamedu PS

முதல் கட்ட விசாரணையில் ஜெகதீஷ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், 1 சவரன் கம்மலும் திருடப்பட்டதும் தெரியவந்தது. மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் உதவியுடன் போலீசார் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web