கஞ்சா வாங்க பணம் தர மறுத்த பெண் படுகொலை.. இளைஞர் கைது.. திருவள்ளூரில் பயங்கரம்!

 
Ponneri

திருவள்ளூர் அருகே கஞ்சா வாங்க பணம் தர மறுத்த உறவுக்கார பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (55). இந்த தம்பதியின் இரு மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், குமார் காலையிலேயே ஒரு வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, தனது மனைவி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போனார்.

இதையடுத்து, மனைவியைத் தூக்கி பார்த்த போது அவர் பேச்சுமூச்சின்றி உயிரிழந்து கிடந்தது தெரிந்ததும் கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் உடலில் கழுத்து மற்றும் மார்பகம், முதுகு ஆகிய இடங்களில் சரமாரியாக கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

murder

தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய ஆய்வில் உயிரிழந்த சரஸ்வதியின் கழுத்திலிருந்த 5 சவரன் தாலிச் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால், நகைக்காக இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்தினர். மோப்ப நாய் டாபி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். துடிதுடிப்பான நாயான டாபி தனது மோப்ப சக்தியை பயன்படுத்தி கொலையாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது.

போலீசாரை இழுத்துக் கொண்டு டாபி அருகில் உள்ள தெருவுக்கு ஓடியது. அங்கு குமார் - சரஸ்வதி தம்பதியின் உறவினரான அசோக் என்பவரை கவ்விப் பிடித்து விடாமல் குறைத்தது. உடனே போலீசார் அசோக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலைக்கான திடுக்கிடும் தகவல் வெளியானது. தம்பதியின் உறவினரான அசோக் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. இவர் அடிக்கடி சரஸ்வதி வீட்டிற்கு சென்று கஞ்சா போதைக்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். அவரும் உறவினர் பையன் தானே என நினைத்து அவ்வப்போது பணம் கொடுத்து உதவினார்.

Ponneri PS

சம்பவத்தன்று கஞ்சா போதைக்காக பணம் கேட்ட சரஸ்வதியிடம் அசோக் தகராறு செய்தார். அதை தெரிந்து கொண்ட சரஸ்வதி பணம் தர முடியாது என மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அசோக் வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியை சரமாரியாக குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குற்றவாளி அசோக்கை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா போதைக்கு பணம் தர மறுத்த வயதான பெண்ணை உறவினரே குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web