பட்டுக்கோட்டையில் அதிக ரத்த போக்கால் பெண் மரணம்.. சுய பிரசவத்தால் விபரீதம்!

 
Pattukkottai

பட்டுக்கோட்டையில் ஆறாவதாக பிறந்த குழந்தையை வறுமையின் காரணமாக கொன்ற தாய் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடக் கூலி தொழிலாளி செந்தில். இவரது மனைவி வசந்தி (38 ). இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் எந்த தகவலும் சொல்லாமல், எந்த ஆவணத்திலும் பதிவு செய்யாமல் உடனடியாக வசந்தியின் உடலை எடுத்து சென்றனர். இது குறித்து அரசு மருத்துவமனை சார்பில் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

dead-body

தகவலின் பேரில் போலீசார் செந்தில் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் அருகில் இருந்த ஒரு வாளியில் ரத்தகரை இருந்தது. அதனை திறந்து பார்த்த போது உள்ளே பிறந்ததும், இறந்த ஒரு குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் வசந்திக்கு 5 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வந்துள்ளார். இதில் 6-வதாக ஒரு குழந்தை உருவாகி உள்ளது. அதனால் இந்த குழந்தையை என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பிரசவ நாளும் வந்து குழந்தையும் பிறக்கும் சூழ்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் வீட்டிலேயே சுயபிரசவம் பார்க்க முடிவு செய்திருக்கலாம் என்றும் சுயபிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததாகவும், குழந்தை பிறந்த பிறகு வசந்தி ரத்தப்போக்கு நிற்காமல் அவரும் இறந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Pattukkottai PS

பின்னர் குழந்தையின் உடல், வசந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web