திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை.. கைதுக்கு பயந்து மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

 
Suchindram

சுசீந்திரத்தில் மாமியர் கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு சுருதி பாபு கணவர் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் சுருதிபாபு நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தனது மாமியாரின் கொடுமையால் தான் நான் தற்கொலை செய்துகொண்டேன் என சுருதி பாபு வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

suicide

அந்த ஆடியோவில், “என்னை எனது மாமியார் அம்மா வீட்டில் விட்டு விட வேண்டும் என அடிக்கடி கூறுறாங்க. அப்படி வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதைவிட இங்கு இருப்பது எவ்வளவோ மேல். அவருக்கும் (கணவர்) எனக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை. இவங்களால்தான் (மாமியார்) எல்லாம் இருக்கு.

கணவருடன் வெளியே செல்லக்கூடாது. கணவர் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டும். எனது கணவர் பக்கத்தில் நான் அமர கூடாது, பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. எச்சில்தட்டு எடுத்து சாப்பிடணும் என்று கொடுமை படுத்துராங்க.

எனது நகை முழுவதும் 2 டப்பாவில் போட்டுள்ளேன். அந்த டப்பாவை எனது கணவரிடம் கேளுங்கள். அவர் தந்திடுவார். அதை தயவு செய்து வாங்கி கொள்ளுங்கள். தமிழ்நாட்டு கலாசாரப்படி எனது இறுதி சடங்கை நிறைவேற்றுவதாக கூறி யாராவது வந்தால், அது தேவையே இல்லை. அப்படி பண்ண விடாதீங்க. இவங்க கலாசாரத்தில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். கோயம்புத்தூர் கொண்டு போங்க. இல்லைன்னா இங்கேயே இறுதி சடங்கு பண்ணுங்க. மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்தால் போதும். இவர்கள் கட்டுப்பாட்டுப்படி ஒன்றும் பண்ண வேண்டாம்.

Suchindram PS

நான் (ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு) அவள் கல்யாணத்துக்கு ஏதாவது பண்ணனும் என்று இருந்தேன். நான் இல்லையென்றால் என்னுடைய ஏதாவது நகையை அவளுக்கு கொடுத்திடுங்க. என்னை மன்னித்திடுங்க அம்மா. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பம் இல்லை. அதனால் மட்டும்தான் நான் போகிறேன். திரும்பவும் அவங்க என்னை வீட்டில் கொண்டு விட சொல்கிறாங்க. திரும்ப வரவேண்டாம் என சொல்கிறாங்க. அப்படி நான் அங்கு வர மாட்டேம்மா.” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், செண்பகவல்லி சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web