திருமணமான 10 நாட்களில்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்.. கதறும் பெற்றோர்!
மேலூர் அருகே திருமணமான 10 நாட்களிலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதியினரின் 2வது மகளான சினேகா (19). இவருக்கும் மேலூர் அருகே நா.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில், பழ வியாபாரம் செய்து வரும் மகேஷ், தனது மனைவி சினேகா மற்றும் மகேஷின் தாயுடன் அவர்களுக்கு சொந்தமான நா.கோவில்பட்டியில் உள்ள புதிய வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 28-ம் தேதி புதுமண தம்பதிகள் பெண்ணின் வீட்டிற்கு மறு வீடு விருந்துக்கு வந்து விட்டு கடந்த 1-ம் தேதி திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், பழ வியாபாரம் செய்வதற்காக மகேஷ், அவரது தாயுடன் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சினேகா யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த மகேஷ் நீண்ட நேரமாக வீட்டின் கதவை தட்டிய நிலையில், கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அவர் தூக்கு மாட்டிய நிலையில் சுய நினைவின்றி இருந்துள்ளார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சினேகாவை மீட்டு, தனியார் வாகனம் மூலம் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அங்கு சினேகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சினேகாவின் உடல் மகேஷின் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மேலூர் காவல்துறை (பொறுப்பு) துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான போலீசார் சினேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சினேகாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை மதி அளித்த புகாரின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.