பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. பெண் உடல் நசுங்கி பலி.. நாங்குநேரி அருகே சோகம்!

 
Nanguneri

நாகர்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் காதர் (44). இவரது மனைவி பவினா (42). இந்த தம்பதிக்கு அப்ரா (21) என்ற மகளும் அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நேற்று திருநெல்வேலிக்கு காரில் சென்றனர். பின்னர் இரவில் மீண்டும் நாகர்கோவிலுக்கு காரில் திரும்பினார். அப்போது அப்துல்லா காரை ஓட்டிச் சென்றார்.

Accident

நள்ளிரவு நாங்குநேரி சுங்கச்சாவடியை கடந்து வேகமாக சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கார் நேராக கவிழ்ந்து பின்னர் தலைகீழாக விழுந்ததில், அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Nanguneri PS

இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் பவினா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web