வேங்கை வயல் விவகாரம்.. டிஎன்ஏ பிரசோதனைக்கு சிறார்கள் 4 பேரும் சம்மதம்
வேங்கை வயல் வழக்கு விவகாரம் தொடர்பாக 4 சிறார்களும் தங்களுடைய பெற்றோர்களுடன் ஆஜர் ஆகி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவின் டிஎன்ஏ-வையும் சந்தேகத்திற்கு உள்ளான நபர்களின் டிஎன்ஏ-வையும் பரிசோதனை செய்ய கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் சந்தேகப்படக்கூடிய 21 நபர்களின் டிஎன்ஏ பெறப்பட்டு சோதனை நிறைவுற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி பருவத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து 4 சிறார்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கான சிபிசிஐடி மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது.
ஏற்கனவே ஒரு ஆயுதப்படை காவலர் உட்பட 21 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை சிபிசிஐடி போலீசார் எடுத்து ஆய்வுக்காக வகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி உள்ள நிலையில் புதிதாக நான்கு சிறார்களிடம் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்து உள்ள நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.