மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.. காரில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி கணவன் பலி!

 
Thanjavur

தஞ்சாவூரில் மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தர்கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேலையில் இருந்து விலகிவிட்டார். தற்போது வேறு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். சுந்தர்கணேஷின் மனைவி நித்யா வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கணவன் - மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கே சென்ற சுந்தர்கணேஷ், தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல், வீட்டில் தான் வைத்து இருந்த அரிவாளை எடுத்து வந்து நித்யாவின் கழுத்து, தலை பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனே வீட்டை விட்டு வெளியேறிய சுந்தர்கணேஷ், தனது காரை எடுத்துக்கொண்டு சென்றார். தஞ்சை பரிசுத்தம் நகர் - யாகப்பா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள பால் நிலையம் அருகே திடீரென காரை நிறுத்தினார். அரிவாளுடன் கீழே இறங்கிய அவர் பால் நிலையத்திற்குள் சென்றார். அங்கிருந்த பால் கடை உரிமையாளர்களான திருப்பூந்துருத்தி பகுதியைச் சேர்ந்த முத்துராஜா மகன் தாமரைச்செல்வன் (34), முருகேசன் மகன் கோபிநாத்(32) ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.

Tanjore

இதில் தாமரைச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கோபிநாத்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல், நித்யாவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி உள்பட 3 பேரை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுந்தர்கணேசை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுந்தர்கணேஷ் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக காரை ஓட்டிச்சென்றார். பின்னர் போக்குவரத்து விதிகளை மீறி வந்த வழியிலெயே காரை திருப்பி எதிர்புறமாக ஓட்டி வந்துள்ளார். முத்தாண்டிப்பட்டி பகுதியில் வந்தபோது எதிரே சென்ற லாரி மீது சுந்தர் கணேஷ் ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர்கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

Police

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து சுந்தர்கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தர்கணேசால் வெட்டப்பட்ட பால்கடை உரிமையாளர்களில் ஒருவரான கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மனைவி உள்பட 3 பேரை அடுத்தடுத்து சுந்தர் கணேஷ் வெட்டியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சுந்தர் கணேஷ் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

From around the web