கள்ளக்காதலன் அடித்துக் கொலை.. மனைவியுடன் வீட்டில் தூங்கியதால் கணவன் வெறிச்செயல்

 
Kanniyakumari

கன்னியாகுமரி அருகே மனைவியுடன் வீட்டில் தூங்கிய கள்ளக்காதலனை மீன்பிடி தொழிலாளி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (34). மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெனிபா ஆல்பர்ட் (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெனிபா வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கண்ணனாகம் பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்க்கும் ஆஷிக்கிற்கும், ஜெனிபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

முதலில் யதார்த்தமாக இருவரும் பேசி பழகினர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கணவன் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் சமயத்தில் ஜெனிபாவும், ஆஷிக்கும் தனிமையில் சந்தித்து தங்களுடைய கள்ளக்காதலை வளர்த்தனர். இது அரசல், புரசலாக சமீருக்கு தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதால் ஜெனிபாவுக்கும், சமீருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனை காரணமாக வைத்து ஜெனிபா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி மங்குழியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இது ஆஷிக்கிற்கு வசதியாகி விட்டது. அங்கு இரவு நேரத்தில் அவருடன் தனிமையில் சந்தோசமாக இருந்து வந்துள்ளார்.

murder

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த சமீருக்கு தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென தோன்றியது. உடனே அவர் ஜெனிபா தங்கி உள்ள மங்குழிக்கு சென்றார். அந்த சமயத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆஷிக் தூங்கிக் கொண்டிருந்தார். அருகே அவருடைய மனைவி ஜெனிபாவும் இருந்தார்.

இதனைக் கண்ட சமீர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அங்கு கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக ஆஷிக் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்த சமீர் பதற்றம் அடைந்தார். மேலும் கள்ளக்காதலன் நிலைகுலைந்து கிடந்த காட்சியை பார்த்து ஜெனிபாவும் அதிர்ச்சி அடைந்தார்.

Police

பின்னர் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு, ஆஷிக்கை தூக்கி நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் போட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டனர். இதற்கிடையே படுகாயமடைந்த ஆஷிக் லேசாக முனங்கியபடி உயிருக்கு போராடியுள்ளார். இதனை கவனித்த சிலர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆஷிக் கொல்லப்பட்டதும், இதில் கணவர் சமீருக்கு ஜெனிபா உதவி செய்ததும் அம்பலமானது. இதனைதொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

From around the web