ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்! சென்னையில் பரபரப்பு!!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அறிவழகனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். போலீசாரைக் கண்டதும் அறிவழகன் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரேம் குமார் அறிவழகனை காலில் சுட்டுப் பிடித்தார். தற்போது அறிவழகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
தப்பி ஓடியதற்காக என்கவுண்டர் செய்யாமல் காலில் சுட்டுப் பிடித்து, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்திய போலீசாருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
