கடைசி வரை வீட்டு முன் போராடிய புதுப்பெண்.. தூக்கில் தொங்கிய காவலர் மனைவி!

 
Tenkasi

தென்காசி அருகே காவல்துறையில் பணிபுரியும் கணவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள கல்லூரணி கிராமம் வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி கிருஷ்ணவடிவு. இவர்களுக்கு குமுதா (23) உள்ளிட்ட 2 மகள்களும், முத்துக்குட்டி என்ற மகனும் உள்ளனர். முத்துக்குட்டி, மணிமுத்தாறு ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சின்னத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

குமுதாவுக்கும், ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சுதர்சன் (29) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்  திருமணம் நடைபெற்றது. சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்தியுள்ளார். பின்பு சென்னைக்கு சென்று வீடு பார்த்து விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் கூறியபடி அமுதாவை அழைத்துச் செல்லவில்லை. குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்தாலும் அதனை சுதர்சன் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து வந்ததாக தெரிகிறது.

suicide

ஒரு கட்டத்தில் குமுதாவிடம், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் தன்னை அழைத்துச் செல்வார் என்ற ஏக்கத்தில் தனது தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா, நேற்று முன்தினம் இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து  தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டு வாசலில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குமுதா தர்ணாவில் இருந்ததை அறிந்த சுதர்சன் வீட்டிற்கு வராமலே இருந்துள்ளார்.

Pavoorchatram PS

குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாசலில் இருந்த போதும் சுதர்சனின் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சுதர்சன் குமுதாவை செல்போனில் அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரத்தி அடைந்த குமுதா நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போ தான் கல்யாணமாச்சு... தாலிக் கயிற்றின் மஞ்ச வாசம் கூட போகலையே... இப்படி தூக்கில் தொங்கிட்டாளே... என்று கல்லூரணி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

From around the web