இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற காதலன்.. மூன்று வருடக் காதல் முடிவுக்கு வந்ததால் விபரீதம்!

 
Tiruppur

திருப்பூரில் மருத்துவமனைக்குள் புகுந்து காதலியை கழுத்தை அறுத்துக் கொன்று காதலனும்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ (21). இவர், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (25) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அன்றைய நாள் முதல் இவர்கள் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். அப்போது, இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக, நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நரேந்திரனும் சத்தியஸ்ரீயும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இதற்கிடையில், இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது காதலில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் தெரிந்தவர்கள், நண்பர்கள் என நரேந்திரன் சத்தியஸ்ரீயின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இருந்தபோதிலும், இவர்களுடைய 3 ஆண்டுகால பழக்கத்தில் பல்வேறு முட்டல் மோதல்கள் நீடித்து வந்துள்ளது.

murder

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களாக நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டியுள்ளது. ஒருகட்டத்தில், சத்தியஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த நரேந்திரன், சத்தியஸ்ரீ செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சத்தியஸ்ரீ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், நரேந்திரனுக்கு தன் காதலியான சத்தியஸ்ரீ மீது ஏற்பட்டிருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியது. அதன்படி, கடந்த 1-ம் தேதி காலை 9 மணியளவில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் கிளம்பி வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நரேந்திரன் தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் கூறியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சத்தியஸ்ரீயும் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்குள் புகுந்து சத்தியஸ்ரீ கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து, படுகாயமடைந்த சத்தியஸ்ரீ சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். இதற்கிடையில், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நேரத்தில், நரேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

Tiruppur North PS

அப்போது, அங்கிருந்தவர்கள் சத்தியஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சத்தியஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். மேலும், இதைக் கேட்ட சத்தியஸ்ரீயின் பெற்றோர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். தனது மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். இதற்கிடையில், உயிருக்குப் போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் கொலை செய்யப்பட்ட சத்தியஸ்ரீயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதே நேரம், குற்றச் செயலில் ஈடுபட்ட நரேந்திரன் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவரால் தற்போது பேச முடியவில்லை. அவர் பேசினால் தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து முழுத் தகவலைப் பெற முடியும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web