கார் விபத்தில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

 
Kerala Kerala

கேரளாவில் குடும்பத்தார் முன் அவமானப்படுத்தியதால் 3 மாதம் பிறகு திட்டம்போட்டு உறவுக்கார சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவாசல் கிராமத்தை சேர்ந்த ஆதிசேகர் (15) என்ற சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர், அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த மாதம் 30-ம் தேதி சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில், காரின் சக்கரத்திலே நசுங்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த குடும்பத்தார் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

boy-dead-body

இந்த நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை துரித படுத்திய போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருக்கும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவனை மோதிய கார், வேண்டுமென்றே அவரை இடித்தது தெரியவந்தது. மேலும் சிறுவன் வரும்வரை காத்திருந்து, அந்த கார் புறப்பட்டதும் கண்டறியப்பட்டது. அதோடு கார் மோதிய பிறகு மீண்டும் பின்னோக்கி வந்து சிறுவன் மீது கார் ஏற்றப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த கார் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் சிறுவனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பிரியரஞ்சன் (35) என்பவரது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரிக்க சென்றபோது, பிரியரஞ்சன் தலைமறைவு ஆகிவிட்டார். இதையடுத்து தொடர்ந்து உறவினர், சிறுவன் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது சிறுவன் ஒருமுறை பிரியரஞ்சனை அவரது மனைவி, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனாலே பழி வாங்க இதுபோல் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கையில், 3 மாதங்களுக்கு முன்பு பிரியரஞ்சன், அந்த பகுதியில் இருக்கும் கோயில் அருகே அமர்ந்து அருந்தியதாகவும், பின்னர் கோயில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும், அதனை பார்த்த சிறுவன் அனைவர் முன்பும் இந்த சம்பவத்தை சொன்னதால் அவருக்கு அவமானம் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து தற்போது தலைமறைவாகி உள்ள பிரியரஞ்சனை 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத்தார் முன் அவமானப்படுத்தியதால் 3 மாதம் பிறகு திட்டம்போட்டு உறவுக்கார சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web