4 மாத குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை... எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து போலீஸ்.. தாம்பரம் அருகே பகீர் சம்பவம்..!

 
vandalur

தாம்பரம் அருகே பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (20), 12-ம் வகுப்பு படித்து முடித்தவுடன் கூடுவாஞ்சேரி உள்ள தனியார் துணி கடையில் பணிபுரிந்து வந்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (20), என்பவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த நிலையில், இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், விஜயலட்சுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார். 7 மாதங்கள் கழித்து விஜயலட்சுமியின் பெற்றோர்களுக்கு இது தெரியவந்தது. இதனால் வருணின் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் கூடுவாஞ்சேரி பகுதியில் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது.

vandalur

இதன் காரணமாக மீனம்பாக்கத்தில் உள்ள  பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் விஜயலட்சுமி சில நாட்களாக தங்கி இருந்தார். மேலும் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வருணும் மீனம்பாக்கத்தில் தங்கியுள்ளார். வருணுக்கு திருமணம் ஆன விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் விஜயலட்சுமியிடம் குழந்தையுடன் வீட்டிற்கு சென்றால் பிரச்சனை ஆகிவிடும் எனக் கூறி குழந்தையை தனது நண்பர் வீட்டில் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு செல்லலாம் என கூறினார். அதன்படி கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தனது நண்பன் வீட்டில் குழந்தையை கொடுத்துவிட்டு விஜயலட்சுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்‌.

அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தனது பெற்றோரிடம் தருண் கூறினார். அப்போது, அதிர்ச்சி அடைந்த வருணின் பெற்றோர் பிறகு சமாதானமாகி இருவரையும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வருணின் பெற்றோரிடம் குழந்தை இருப்பதை இருவரும் கூறாமல் இருந்துள்ளனர். விஜயலட்சுமியிடம் குழந்தை நண்பனின் வீட்டில் பாதுகாப்பாக வளரட்டும், விரைவில் தனது பெற்றோரிடம் கூறி அதன் பின் குழந்தையை எடுத்து வருவதாக வருண் கடந்த 3 மாதங்களாக கூறி வந்துள்ளார்.

இதனிடையே, உடனடியாக தன் குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி வருணிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது தான் வருணின் பெற்றோருக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. அதன்படி குழந்தை குறித்து வருணிடம் பலமுறை கேட்டும் அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Manimangalam PS

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வருணின் வீடு இருந்த முகவரி மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் மணிமங்கலம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறினர். அதன் பின்பு மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வருணை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை கொன்று கூடுவாஞ்சேரி பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு அங்கு விரைந்து சென்ற போலீசார் 4 மாத ஆண் குழந்தை புதைத்த இடத்தை தோண்டி பார்த்தபோது எலும்புக்கூடு மட்டுமே சிக்கியது. அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web