சிறுவன் உயிருடன் எரித்துக் கொலை.. அக்காவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களால் ஏற்பட்ட விபரீதம்!!

 
Andhra

ஆந்திராவில் 16 வயது சிறுவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் உப்பல்லா அமர்நாத் (16). தன்னுடைய தந்தை மறைவிற்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா வீட்டில் அமர்நாத் வசித்து வந்தான். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துக் வந்த சிறுவன், டியூஷனுக்காகவும் தினமும் காலை பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று காலை 5 மணியளவில் சிறுவன் அமர்நாத் வீட்டிலிருந்து டியூசனுக்கு புறப்பட்டு சென்றான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை. அன்று வீட்டிலிருந்து கிளம்பிய 10 நிமிடத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன் அமர்நாத், யாரோ சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளான்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பதறிபோய் அங்கு ஓடினர். அங்கு தீயில் எரிந்த நிலையில் கிடந்த சிறுவன் அமர்நாத்தை அவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் அமர்நாத் பேசியுள்ள கடைசி வீடியோவில், தான் தாக்கப்படுவதாகவும், தன் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Andhra

அந்த வீடியோவில், “நான் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது என்னை வழிமறித்தனர். சாலையில் என்னை நிறுத்திய அவர்கள் என் வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். என் கைகளைப் பின்னால் வைத்துக் கட்டினர். எனது உடலை தார்பாய் வைத்து சுற்றியதுடன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். என்னைத் தாக்கிய வெங்கடேஸ்வருடன், மற்றொரு 3 நபர்கள் இருந்தனர். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்போது நடந்திருப்பது அவர்களுக்கும் நடக்கவேண்டும். அவர்களை விட்டுவிடாதீர்கள்” என்று கூறியுள்ளான்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அமர்நாத் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவன் அமர்நாத்தின் உடலெ குண்டூர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

உயிரிழந்த சிறுவன் அமர்நாத்தின் சகோதரி 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் ரெட்டி (23) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் சகோதரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

Andhra

இந்த தகவல் சிறுவன் அமர்நாத்துக்கு தெரியவந்ததால் அவன், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறியுள்ளான். இதனால் அவர்கள் வெங்கடேஸ்வர் ரெட்டியை பிடித்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வர் ரெட்டி சிறுவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் உயர் சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழந்த அமர்நாத் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதால், இந்த வழக்கு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி வெங்கடேஸ்வரா தலைமறைவான நிலையில், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web