சூட்கேசில் இளம்பெண் சடலம்.. கள்ளக்காதலியை கொன்று அடைத்து வீசியது அம்பலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

 
Salem

ஏற்காட்டில் கள்ளக்காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அப்போது அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.

போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 

அதன் விவரம் வருமாறு, நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.

Murder

இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன் - மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார். உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.

பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்னர்.

Police-arrest

அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ம் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர். போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நட்ராஜ் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி பெயரை நெஞ்சில் டாட் டூவாக வரைந்து இருந்தார். இதனை அறிந்த சுபலட்சுமி தன்னுடைய பெயரையும் உடலில் டாட் டூவாக வரையும்படி நட்ராஜிடம் கூறியுள்ளார். ஆசைநாயகி கூறி விட்டாளே என்று நட்ராஜும் சுபலட்சுமி பெயரை கையில் டாட் டூ வாக வரைந்து இருந்துள்ளார். மனைவி குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு சென்ற நட்ராஜ், டாட் டூ வாக கையில் இருந்த சுபலட்சுமி பெயரை அழித்துள்ளார். மீண்டும் கோவைக்கு நட்ராஜ் வந்தார். வீட்டில் தங்கி இருந்த போது கையில் வரைந்து இருந்த தனது பெயரை ஏன் அழித்தீர்கள் என்று கேட்டு சுபலட்சுமி தகராறில் ஈடுபட்டுள்ளார். மழுப்பலான பதிலை நட்ராஜ் கூறி பார்த்தும் ஆசை காதலியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தகராறு முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி கொலை செய்துள்ளார். இப்படியாக சுபலட்சுமி கொலைக்கு டாட் டூ காரணமாக அமைந்து விட்டது.

From around the web