சடன் பிரோக்.. பேருந்து சக்கரத்தில் சிக்கி ப்ளஸ்-2 மாணவன் பலி.. மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி!!

 
Chennai

மாதவரம் அருகே மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி ப்ளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ்குமார் (18). இவர், பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்து வந்தார். பின்னர் தன்னுடன் வேலை செய்த செந்தில்குமார் (43) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

Accident

மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது சோழவரம் ஞாயிறு பகுதியில் இருந்து சென்னை வள்ளலார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்து (தடம் எண் 57 ஜே), சென்னை மாதவரம் ஆந்திரா புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல உள்ளே வருகை தந்துள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரும், செந்தில்குமாரும் தங்களது இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விடாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் தனது நிலைப்பாட்டை மீறி அரசு பேருந்தின் மீது மோதி பின்பக்க சக்கரத்தில் இருவரும் சிக்கினார்கள்.


இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செந்தில்குமார் நூல் இலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னால் அமர்ந்து வந்த ராஜேஷ்குமார் மீது அரசு பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு அவசர ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் மாநகர பேருந்து ஓட்டுநர் சங்கர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web