ஒரே நாளில் பல்கலைக்கழக விடுதியில் மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விருதுநகரில் அதிர்ச்சி!

 
Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பல்கலைகழகத்தில் ஒரே நாளில் மாணவர், மாணவி என இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் நரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா. இவரது மகன் மஞ்சுநாத் (20). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களாக அவர் வகுப்புக்குச் செல்லாமல் அறையிலேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

suicide

இந்த நிலையில் நேற்று காலை அவர் வகுப்புக்குச் செல்லாமல் இருந்துள்ளார். தனது அறையில் தங்காமல், தனது நண்பர்கள் அறையில் தங்கியுள்ளார். சக மாணவர்கள் வகுப்புக்கு சென்றுவிட்டு, காலை 11.30 மணிக்கு அறைக்கு வந்த போது மஞ்சுநாத், அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதேபோல ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புள்ளகுர்லாபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபாலப்பா என்பவர் மகள் அகிலா (19) அதே பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் தங்கி எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரும் நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். வகுப்பு முடிந்து சக மாணவிகள் அறைக்கு வந்து பார்த்தபோது, உள்பக்கமாக பூட்டப்பட்டு அகிலா, மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Police

இது குறித்து கிருஷ்ணன்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்குவந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஒரே நேரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த,  மாணவரும், மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து விருதுநகர் ஏடிஎஸ்பி சூரியபிரகாஷ் நேரில் விசாரணை நடத்தினார். இருவரது தற்கொலைக்குமான காரணம் குறித்து கிருஷ்ணன்கோயில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web