கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை.. மகனை தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

எடப்பாடி அருகே உள்ள அரசு கல்வியில் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தில் இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் அருகே கோணங்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் குணால் (21). இவர், திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கச்சுப்பள்ளியை அடுத்த எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள அரசு கல்வியல் கல்லூரி வளாகத்தின் முன்பு நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியதாகவும், மீண்டும் பாட்டி வீட்டுக்கு வரவில்லை என்றும் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் குணாலின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே, கல்லூரியின் மேல்மாடியில் பெற்றோர்கள் ஏறிப் பார்த்தபோது குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொங்கணாபுரம் போலீசார், குணாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.