கட்டையால் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்.. விழுப்புரம் அருகே பயங்கரம்!
விக்கிரவாண்டி அருகே குடும்பத் தகராறில் மாமனாரை மருமகனே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வேலியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 4வது பெண்ணான கௌசல்யா சென்னையில் வேலை செய்து வந்த போது திருவண்ணாமலையை சேர்ந்த கேசவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ்குமார், ஜென்விஷா என இரண்டு குழந்தைகள உள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையான கேசவன், மனைவி கௌசல்யாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், கடந்த 4 ஆண்டுகளாக கௌசல்யா அவருடைய சொந்த ஊரான வேலியந்தல் கிராமத்தில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பெங்களூருவில் வேலை செய்யும் கேசவன் அடிக்கடி மனைவி, குழந்தைகளை வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மனைவி, குழந்தைகளை பார்க்க வந்த கேசவன், மது குடித்துவிட்டு நள்ளிரவு மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேசவன் சொந்த ஊர் செல்வதாக கூறியுள்ளார். அப்போது மாமனார் ஆறுமுகம் கேசவனை மறித்து, குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கேசவன் அருகில் இருந்த கட்டையால் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கஞ்சனூர் போலீசார் கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.