இளைஞர் தலையை துண்டித்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்.. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் விபரீதம்!

 
Solapuram Solapuram

கும்பகோணம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி  புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் திருமணம் ஆகாத நிலையில் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜன் தனது சொந்த்த ஊருக்கு சென்றுள்ளார். பாட்டி வீட்டில் பண்டிகை கொண்டாடிவிட்டு, 13-ம் தேதி சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

அசோக்ராஜன் சென்னை சென்று விட்டாரா என கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது செல்போன் எண்ணுக்கு உறவினர் மூலம் தொடர்புக் கொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சோழபுரம் கடைத்தெருவில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்று மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்ததுள்ளது. அதில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் எழுதியிருந்தது. ஆனால் அது அசோக்ராஜன் கையெழுத்து இல்லை என்பது தெரியவந்தது.

Murder

பின்னர் அந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் கேசவமூர்த்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கேசவமூர்த்தியும், அசோக்ராஜனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து கேசவமூர்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்சியடைந்தனர். கேசவமூர்த்தி கூறியதாவது, அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி என்னிடம் அழுதார். இதனால் நான் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதை காரணமாக வைத்து இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டோம்.

Solapuram PS

கடந்த 13-ம் தேதி அவர் வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் அவரை அழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன். அந்த மருந்தை சாப்பிட்ட உடன் பக்க விளைவுகள் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்தேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் மாயமானது தொடர்பாக சித்த வைத்தியரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது வீட்டின் பின்புறம் வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web