டாஸ்மாக் வாசலில் ரவுடி வெட்டிக்கொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்!
சென்னையில் நண்பர்களுடன் மது அருந்த வந்த ரவுடியை பட்டப்பகலில் டாஸ்மாக் வாசலில் வைத்து கொலை விட்டு தப்பிச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார் (35). இவர் மீது பேசின் பிரிட்ஜ், காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை சென்ட்ரல் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி பிரேம்குமார் தனது கூட்டாளி வசந்தகுமார், நரேஷ் ஆகியோருடன் இவ்வழக்கு விசாரணைக்காக இன்று அள்ளிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் விசாரணை முடிந்து ரவுடி பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலை எவரெஸ்ட் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றனர்.
அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், மது அருந்திவிட்டு வெளியே வந்த மூன்று பேரையும் டாஸ்மாக் கடை வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு கையில் கத்தியுடன் நடுரோட்டில் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரவுடி பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் நரேஷ் மற்றும் வசந்தகுமார் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரவுடி பிரேம்குமார் உடலைக் கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த நரேஷ், வசந்தகுமார் இருவரை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.