ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் பயங்கரம்!

 
Chennai

சென்னை வேளச்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திநகர் மேட்லி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பழனிசாமி தொழில் சம்பந்தமாக தனது நண்பர் ராம்குமார் (50) என்பருடன், வேளச்சேரி சேவா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்கு காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடந்த சென்று கொண்டிருந்தார்.

அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென பழனிசாமியை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் ராம்குமார் அவர்களைத் தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் ராம்குமாரை துரத்திவிட்டு பழனிசாமியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது.

murder

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பழனிசாமி உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தரமணி போலீசார் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பழனிசாமியின் நண்பர் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக பழனிசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் பழனிசாமி கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும் கொலையாளிகள்‌ குறித்தும்‌ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tharamani PS

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரியல் எஸ்டேட் அதிபர் பழனிசாமி வெட்டிக் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web