வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணி மனைவி.. பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்ற காதல் கணவன்!

 
Mysuru

கர்நாடகாவில் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் காதல் கணவனே பிளேடால் கர்ப்பிணியின் கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சாமலாப்பூர் உண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷோபா (26). இவரது கணவர் மஞ்சுநாத் என்கிற மஞ்சு (27). இருவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். 

இந்த நிலையில் ஷோபா 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே மஞ்சுநாத், ஷோபாவிடம் அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் வரதட்சணை வாங்கி வர மறுத்து வந்துள்ளார்.

Blade

இந்த நிலையில் பிரசவத்திற்காக கடந்த மாதம் முதல் ஷோபா சாமலாப்பூரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்து வந்தார். நேற்று முன்தினம் அங்கு வந்த மஞ்சுநாத், பெற்றோரிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி ஷோபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். உடனே அங்கிருந்து மஞ்சுநாத் தப்பி ஓடிவிட்டார்.

Police

இதையடுத்து ஷோபாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நஞ்சன்கூடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து நஞ்சன்கூடு டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணியை காதல் கணவரே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web