ப்ளஸ்-1 மாணவியை குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்.. ஓசூரில் நடந்த பயங்கரம்!

 
Hosur

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவரது மனைவி காமாட்சி (35). இந்த தம்பதிக்கு ஸ்பூர்த்தி (16) என்ற மகள் இருந்தார். இவர், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி சடலமாக கிடந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Murder

விசாரணையில், மாணவி, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதாவது, ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இது ஸ்பூர்த்தியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. மேலும், அவர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை, எனவே பெற்றோர், ஸ்பூர்த்தியை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்து சிவா உடனான காதலை தொடர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி ஆகியோர் மாணவியை தாக்கி கொன்று உடலை சாக்கு மூட்டையில் அடைத்து, மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள அண்ணா நகர் ஏரியில் வீசியதாக தெரியவந்துள்ளது.

Bagalur PS

இதையடுத்து பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web