கூலித்தொழிலாளியை கொலை செய்த பெயிண்டர்.. பார்க்கிங் பிரச்னையால் பயங்கரம்!

 
Thanjavur

தஞ்சாவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை பெயிண்டர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன் (32). இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குணசேகரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே இருசக்கர வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

murder

இந்த நிலையில் நேற்று இரவு தர்ஷன் தனது இருசக்கர வாகனத்தை குணசேகரன் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குணசேகரன், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டதும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதையடுத்து தர்ஷனுக்கும் குணசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த குணசேகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்ஷனை சரமாரியாக குற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தர்ஷனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Thanjavur Town PS

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி இன்று தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் குணசேகரனை கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் நிறுத்தும் பிரச்சனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web