நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை.. மனைவி கண்முன்னே கொடூரம்.. புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
நரிக்குறவ இளைஞரை போதைக்கு அடிமையான சைக்கோ நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ரயிலில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திக் (25). இவர் ஊசி பாசி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் அவருடைய மனைவி இந்திராவுடன், திருவள்ளூரில் இருந்து ரயிலில் ஊசி பாசிமணி விற்பனை செய்து வந்துள்ளார். பின்னர், அவர்கள் புட்லூர் ரயில் நிலைய நடைமேடையில், மாலை 6 மணியளவில் கணவன் மனைவி இருவர் அமர்ந்து ஊசி பாசிமணி விற்பனை செய்து வந்துள்ளனர்.
அப்போது, திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் வந்த மர்ம நபர் ஒருவர், புட்லூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அந்த நபர் நடைமேடையில் அமர்ந்து கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து ஆபாச வார்த்தையில் பேசியதாகவும், அதற்கு கார்த்தியும் அவரை ஆபாச வார்த்தையில் திட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், தான் வைத்திருந்த காய் நறுக்கும் கத்தியைக் கொண்டு, கார்த்திக்கின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு, பின்னர் சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏறி தப்பியுள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த திருவள்ளூர் இருப்புப் பாதை போலீசார், ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே கிடந்த கார்த்திக்கை மீட்டு, ஆட்டோ மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரயில் நிலைய டிக்கெட் விற்பனையாளர் தனது செல்போனில் எடுத்த வீடியோ ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது கார்த்திக்கை கொலை செய்த நபர், திருத்தணியைச் சேர்ந்த தமிழரசன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழரசன் மதுவுக்கும், கஞ்சா புகைப்பதற்கும் அடிமையானதால் மனநலம் பாதிக்கப்பட்டு, சைக்கோவாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி கஞ்சா போதையில் தன்னைத் தானே பிளேடால் காயப்படுத்திக் கொள்வதும், திருத்தணி பகுதியில் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் அரக்கோணம் முதல் சென்னை செல்லும் ரயிலில் பயணித்து, பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளார்.
தற்போது தமிழரசன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கொலை செய்து விட்டு ரயிலில் தப்பிய தமிழரசனைப் பிடிக்க சென்னை முதல் அரக்கோணம் செல்லும் வழித்தடங்கள் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாருக்கு அவசரத் தகவல் அளிக்கப்பட்டது.
தமிழரசன் கொலை செய்து விட்டு சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏறிச் சென்றதால், அந்த வழியாகச் சென்ற மின்சார ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிகளிலும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வருவதால், தொடர்ந்து தமிழரசனை போலீசார் தேடி வருகின்றனர்.