நெல்லையில் தொடரும் கொலை குற்றங்கள்.. ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை.. மர்ம கும்பலுக்கு தனிப்படை வலைவீச்சு!

 
Munnirpallam

முன்னீர்பள்ளம் அருகே ஆட்டோ ஓட்டுநர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை (65). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயகுமார் மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னீர்பள்ளம் போலீசார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொலை நடந்த பகுதியில் பதட்டத்தை தணிக்க சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Munnirpallam PS

இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பாஜக பிரமுகர் கொலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

From around the web