இடுப்பில் துப்பட்டாவை கட்டி ஆற்றில் குதித்த தாய் - மகள் மரணம்.. தஞ்சாவூர் அருகே சோகம்!

 
Thanjavur

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் தாய் - மகள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு தெக்கூர் பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் நேற்று காலை பெண் மற்றும் சிறுமியின் உடல்கள் மிதந்து வந்தன. பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் சிறுமி கட்டப்பட்ட நிலையில் இருந்த இரண்டு சடலங்களையும் பொதுமக்கள் மீட்டு கரையில் சேர்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

water

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் இரண்டு சடலங்களையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தஞ்சாவூர் விளார் சாலை தில்லைநகர் லெனின் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி பத்மஜோதி (38), இவரது இளைய மகள் தீபிகா (15) என்பதும் தெரியவந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக செந்தில்குமாரை விட்டு பிரிந்து பத்மஜோதி இளைய மகளுடன் தஞ்சாவூரிலும், செந்தில்குமாரும் அவரது மூத்த மகள் பூர்விகா (17) திருவாரூரில் வசித்து வந்தனர்.

Thanjavur Taluk PS

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால், தாயும் மகளும் சுடிதார் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web