கள்ளக்காதலில் பிறந்ததால் 10 அடி ஆழ குழிக்குள் வீசி கொன்ற கொடூர தாய்.. திருவள்ளூரில் பரபரப்பு!

 
Tiruvallur

கள்ளக்காதலில் பிறந்ததால் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை 10 அடி ஆழ குழிக்குள் வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் போடப்பட்டு இருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

baby

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன.

இதற்கிடையே காலை 10 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் லதா என்பவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசி சென்று இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tiruvallur Taluk PS

கணவரை இழந்த லதாவுக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் தகாத உறவில் இருந்ததால் இந்த குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார். இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இதையடுத்து லதாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web