தாய், கர்ப்பிணி மகளுடன் தற்கொலை முயற்சி.. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது கர்ப்பிணி மகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தனது மகள்களான நித்யஸ்ரீ, ரேகா ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது பார்வதி தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும், தன் அருகில் நின்று கொண்டிருந்த 2 மகள்கள் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி மூவரையும் காப்பாற்றி உள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம், விசாரணை மேற்கொண்டதில், “எனது கணவர் பக்கவாதம் நோயால் உயிரிழந்து விட்டார். இரண்டு மகள்களுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கடன் காரணமாக எங்கள் பூர்வீக நிலம் மற்றும் 2008-ம் ஆண்டு சொந்தமாக வாங்கிய நிலத்தை விற்பனை செய்ய முயன்றேன்.

Krishnagiri

அப்போது எனது கணவரின் உறவினர்கள் மகேஸ்வரி, சின்னசாமி, வேல்முருகன் ஆகியோர் எங்கள் சொத்தில் அவர்களுக்கு உரிமை இருப்பதாகவும், அதற்காகப் பணம் தர வேண்டும், அப்படி இல்லையெனில் விற்பனை செய்ய விடமாட்டோம் எனவும் கூறி தடுக்கின்றனர். மேலும் நாங்கள் இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த நகை மற்றும் சொத்து ஆவணங்களைத் திருடிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் அல்லது ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தால் எங்களைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். கடன் சுமையில் தவித்து வருகிறோம். முதல் மகள் நித்யஸ்ரீக்கு வளைகாப்பு செய்ய வேண்டும். அதனைச் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை கூறினார்.

Krishnagiri collector office

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி மகளுடன் வந்து தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

From around the web