2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட தாய்.. நாமக்கல் அருகே சோகம்!!

 
Namakkal

மோகனூரில் 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் புது தெரு காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (70). இவர் மோகனூர் பேரூராட்சி சந்தை அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் குணவதி (28). இவரும் அதேபகுதியைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவா்களுக்கு பிரணவ் பிரியன் (5), சுஜித்பிரியன் என 2 ஆண் குழந்தைகள் இருந்தன. காதல் தம்பதியினர் கேசவன் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து கடையை நடத்தி வந்தனர். மகன் பிரணவ் பிரியன் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குணவதி குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வேண்டும், கோவிலுக்கு செல்ல வேண்டும் என தந்தை கேசவனிடம் கூறியிருக்கிறார். அப்போது அவர் உனது மாமனார், மாமியாரை அழைத்துச் செல் என கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த குணவதி சிறிது நேரத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அதன்பிறகு வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை.

Dead-body

இதையடுத்து மாயமான மகளையும், பேரக்குழந்தைகளையும் கேசவன், மருமகன் கோபி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அருகில் இருந்த கிணற்றுப் பகுதியில் பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த வேப்ப மரத்தில் குணவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையிலும், 2 குழந்தைகள் கிணற்றுக்குள் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து குணவதியின் தாயார் பூங்கோதை மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகள் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

Mohanur PS

விசாரணையில், குணவதி 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அருகில் இருந்த வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துக்கம் தாங்காமல் குணவதியின் தந்தை கேசவன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

From around the web