3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை.. கணவன் இறந்த 3வது நாளில் சோகம்!!

 
Kottaiyur

வத்திராயிருப்பு அருகே கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன் (36). இவரது மனைவி பாண்டீஸ்வரி (32). இந்த தம்பதிக்கு வைத்தீஸ்வரி (15), காளிஸ்வரி (11) என இரு பெண் குழந்தைகளும், விக்னேஷ்வரன் (4) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதில், வைத்தீஸ்வரி ஊர் அருகே உள்ள மகாராஜபுரம் பள்ளியில் 11ம் வகுப்பும், காளீஸ்வரி கோட்டையூரிலுள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஈஸ்வரனுக்கு சொந்தமான விவசாய தோட்டம் கோட்டையூரில் இருந்து துலுக்கபட்டி செல்லும் சாலையில் மரிக்களம்காத்தான் கண்மாய் அருகில் உள்ளது. ஈஸ்வரனின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்தது. இந்த நிலையில், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

Kottaiyur

ஈஸ்வரனின் பிரிவால் பாண்டீஸ்வரி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவர் இல்லாமல் எப்படி குழந்தைகளை வளர்க்கப்போகிறோம்? என பாண்டீஸ்வரி அழுது புலம்பியுள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர். குழந்தைகளோடு பாண்டீஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

இந்நிலையில், இன்று காலை 2 மகள்கள், மகனோடு தனது தோட்டத்திற்கு பாண்டீஸ்வரி சென்றார். அங்கு கிணற்றில் மகள்கள், மகனோடு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவ்வழியாக தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் கிணற்றில் உடல் மிதப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Watrap PS

தகவலின் பேரில் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த பாண்டீஸ்வரி, அவரது மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகியோர் உடல்களை மீட்டனர். 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web