மகன்களை எரித்து கொன்ற தாய்.. குடும்ப தகராறில் நடந்த விபரீதம்!
திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வடக்கநாடு புத்தன்வீட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (52). இவர், கட்டிட சென்டிரிங் வேலைக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி ஷீபா (41). இவர்களுக்கு கெவின் (15), கிஷான் (7) என 2 மகன்கள் இருந்தனர். மகன்கள் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேருக்கும் கால்களில் பக்க வாத நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நோய் சரியாகவில்லை. இது ஷீபாவுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். தொடர்ந்து மிகுந்த மனவேதனையில் இருந்த ஷீபா தனது 2 மகன்களுடன் வீட்டின் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஷீபாவின் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. மேலும் வீட்டில் இருந்து ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என அலறல் சத்தம் கேட்டது. அதிகாலை நேரம் என்பதால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் வெளியே வந்தார்.
அவர் ஏசுதாசின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் அவர் பக்கத்தில் உள்ள பிற வீட்டாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டி அழைத்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. மாறாக அலறல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அத்துடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்து புகை வருவது தெரியவந்தது. அந்த அறையும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதனையும் உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். ஷீபாவும், அவருடைய மகன்களும் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் படுத்திருந்த படுக்கையும் எரிந்திருந்தது.
இந்த சூழலில் திருவட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். அத்துடன் இரவில் வெளியே சென்றிருந்த ஏசுதாசும் தகவல் கிடைத்து அலறியடித்து கொண்டு ஓடி வந்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து தீயில் கருகி கிடந்த தாய் - மகன்களை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளைய மகன் கிஷான் பரிதாபமாக இறந்தான். ஷீபா மற்றும் மூத்த மகன் கெவின் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஷீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தாய் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ஷீபாவின் தந்தை செல்லதுரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகன்களுக்கு நோய் இருந்ததால் ஷீபா மிகுந்த மன வேதனையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதையடுத்து கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
இது ஷீபாவுக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தான் சென்று விட்டால் மகன்கள் இருவரும் அனாதையாகி விடுவார்கள் எனக்கருதி அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல நினைத்தார். இதனால் மகன்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றி எரித்து கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஷீபா நேற்று முன்தினம் இரவு கணவர் வெளியே சென்ற பின்பு தனது மகன்களுடன் படுத்து தூங்க சென்றார். மகன்கள் இருவரும் விரைவில் தூங்கி விட்டனர். ஆனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஷீபா சரியாக தூக்கம் வராமல் இருந்துள்ளார். இந்தநிலையில் அதிகாலையில் எழுந்து சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த மண்எண்ணெய்யை எடுத்து ெகாண்டு படுக்கை அறைக்கு வந்தார். பின்னர் மனதை கல்லாக்கிக் கொண்டு தூங்கி கொண்டிருந்த மகன்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றினார். அத்துடன் தன் மீதும் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டார். மகன்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் முன்பு அவர்கள் மீதும் தன்மீதும் தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
ஷீபா தனது மகன்களை எரித்து விட்டு தீக்குளித்த சம்பவம் அறிந்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கணவர் ஏசுதாஸ் எங்கே? என போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஆனால், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஏசுதாசை போலீசார் தெரு தெருவாக தேடினர். இறுதியில் வேர்க்கிளம்பியில் கடை திண்ணையில் படுத்து தூங்குவதை கண்டு பிடித்து அவரை தட்டி எழுப்பி தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தனர்.
ஏசுதாசுக்கும் அவருடைய மனைவி ஷீபாவுக்கும் இடையே நேற்று முன்தினம் காலையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏசுதாஸ் மீது ஷீபா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார். இதனால் ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீபா ஏசுதாசிடம் வீட்டுக்குள் வரக்கூடாது எனக்கூறி தகராறு செய்தார்.
இதனால் ஏசுதாஸ் வெளியே புறப்பட்டு சென்று வேர்க்கிளம்பியில் உள்ள கடை திண்ணையில் படுத்து தூங்கினார். இவர்கள் இடையே இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் அக்கம் பக்கத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தநிலையில் அதிகாலையில் மனைவி தனது மகன்களை கொன்று தீக்குளித்த சம்பவம் அறிந்ததும் அவர் வீட்டுக்கு வந்து கதறித்துடித்தது பார்த்தோர் கண்களை குளமாக்கியது.