ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. நெல்லை பாய்ஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

 
Villupuram

விழுப்புரம் அருகே  ஓடும் ஆம்னி பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான மாணவி, கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி ஹோமியோபதி படித்து வருகிறார். இவரது கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கணவரைப் பார்ப்பதற்காகச் சென்னை வந்தார். அதன் பின்பு, நேற்று முன்தினம் (நவ. 14) இரவு சென்னை கோயம்பேட்டிலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காகத் தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார்.

இதனையடுத்து, இந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிக்குச் சென்றபோது திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வாலிபர்கள் மது போதையில் பேருந்தில் ஏறினர். அந்த வாலிபர்களில் 2 பேர், அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள தனது உறவினர்களைச் செல்போனை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.

sexual harrasment

இதனிடையே, போதை தலைக்கேறிய இரண்டு வாலிபர்களும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் கொடுத்த தகவலின் பேரில் பெண்ணின் உறவினர்கள் விழுப்புரத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை துரத்திச் சென்று வழிமறித்துள்ளனர். அதன் பிறகு, அந்த உறவினர்கள் பேருந்தில் ஏறிச் சென்று அந்த வாலிபர்கள் 12 பேருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர், அந்தப் பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு, அந்த வாலிபர்கள் 12 பேரையும் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அந்த பெண், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரையும் அடையாளம் காண்பித்தார்.

Police-arrest

இதனையடுத்து, அந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையைச் சேர்ந்த முகமது யாசர் (20) என்றும், அதே பகுதியைச் சேர்ந்த தங்க மாரியப்பன் (21) என்றும் போலீசாருக்குத் தெரியவந்தது. மேலும், குடிபோதையில் இருந்த இருவரும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web