2வது திருமணம் செய்த மெக்கானிக்.. முதலிரவில் அதிர்ச்சி கொடுத்த கேரள பெண்.. திருப்பூரில் பரபரப்பு

 
TIruppur

தாராபுரத்தில் நகை, பணத்திறக்காக கணவருடன் சேர்ந்து வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (29). இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது மனைவி ராதாகிருஷ்ணனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.

இதனை தெரிந்து கொண்ட கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அப்போது அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காண்பித்தார். அந்த படத்தில் இருந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பிடித்து விட்டது.

இதையடுத்து தடபுடலாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி புரோக்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்று ராதாகிருஷ்ணன் வீட்டார் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை சவரனில் நகை வாங்கி போட்டுள்ளனர். மேலும் புரோக்கருக்கு ரூ.80 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர்.

Marriage

தேதியும், நேரமும் நெருங்கி வந்ததால் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலிரவின்போது புதுப்பெண், ராதாகிருஷ்ணனிடம், “தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்” என்றும் கூறி நைசாக முதலிரவை தவிர்த்துவிட்டார்.

மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார். பொள்ளாச்சிக்கு சென்றதும் அந்த கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

Dharapuram PS

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை, பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் திருமண புரோக்கரையும், அவரது மனைவியையும் தேடி வருகின்றனர்.

From around the web