9 நாட்களாக காணாமல் போன நபர்... குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்... பொதுமக்கள் அதிர்ச்சி!

 
Virudhachalam

விருத்தாசலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவரது மகன் சரவணக்குமார் (34). பொறியியல் பட்டதாரியான இவர் அவரது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சரவணக்குமாரை கடந்த 9 நாட்களாக காணவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் வரும் குடிநீரில் 2 நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது.

dead-body

ஆனால் பொதுமக்கள் அந்த தண்ணீரை 2 நாட்களாக குடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் 3-ம் நாளான இன்று துர்நாற்றம் அதிகமானதால், சந்தேகமடைந்த பொதுமக்கள் நீர்தேக்க தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே சரவணக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karuveppilankurichi PS

இந்த நிலையில் 9 நாட்களாக சடலமாக நீர் தேக்க தொட்டிக்குள் இருந்ததால் தண்ணீர் குடித்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொற்று பரவாமல் இருக்க மருத்துவ குழு பொதுமக்களை பரிசோதித்து வருகிறது.

From around the web