திருப்பூரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்.. கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

 
Tiruppur

திருப்பூர் அருகே தனியார் செய்தியாளர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரினெ கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24-ம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

Nesaprabhu

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

From around the web