பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி!

 
Chennai Chennai

சென்னையில் பட்டப்பகலில் அடகு கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்து முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ் (33). இவர் அதே பகுதியில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை மற்றும் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கடைக்கு வந்த பிரகாஷ் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

Chennai

அப்போது இன்று மதியம் 12 மணியளவில் சொகுசு காரில் வந்த 4 பேர்‌ கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பிரகாஷை கட்டி போட்டு கடையில் இருந்த 1.50 கோடி‌ ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பி சென்றது.

பிரகாஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துக் கடைக்காரர்கள் பிரகாஷ் கட்டை அவிழ்த்து அவரை மீட்டனர். அதன் பின்னர் பிரகாஷ் இது குறித்து ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த முத்தாப்புதுப்பேட்டை போலீசார் நகை கடை உரிமையாளர் பிரகாஷிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

Muthapudupet PS

மேலும் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் நகைக்கடைக்குள்‌ புகுந்து துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web