மீண்டும் ஒரு வேங்கைவயலா? பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்.. பென்னாகரம் அருகே பரபரப்பு!

 
Dharmapuri

பென்னாகரம் அருகே பனைகுளம் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நேற்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தார். 

Dharmapuri

அப்போது அந்தத் தொட்டியில் மலம் கலந்து உள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடய அறிவியல் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மனித மலம் கலக்கப்பட்டதா? அல்லது குரங்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் விலங்குகளின் மலம் கலக்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்து துர்நாற்றம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

DHarmapuri

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த சம்பவம் நிகழ்ந்து 6 மாதங்கள் ஆன பின்னரும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது தர்மபுரி பென்னாகரம் அருகே அதே போன்ற நிகழ்வு நடந்தேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web