கயிற்றால் கழுத்தை இறுக்கி கணவன் கொலை.. நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி வெறிச்செயல்!

 
Madurai

மதுரை அருகே காதல் கணவனின் கழுத்தை, கயிற்றால் நெரித்து, மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி - அஞ்சுகுளி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (27). இவரது மனைவி மஞ்சுளா (24). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சபரி பாண்டி, சரவண பாண்டி, மகாலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்ற மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மனம் வெறுத்த மனைவி மஞ்சுளா விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார்.

murder

சம்பவத்தன்று வீட்டில் உறங்கி கொண்டிருந்த ராஜ்குமாரின் கழுத்தில் நைலான் கயிற்றை போட்டு மஞ்சுளா இறுக்கி உள்ளார். போதை தலைக்கேறி இருந்ததால் ராஜ்குமாரால் தனது சாவை எதிர்த்து போராட முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தன் கணவர் தனக்குத்தானே கழுத்தில் கயிற்றால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மஞ்சுளா நாடகமாடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். அதில், தான் எப்படியும் சிக்கி விடுவோம் என்று மஞ்சுளாவிற்கு தெரியவர அவர் சரணடைய முடிவு செய்தார். காவல்நிலையம் செல்லாமல் ஊர் வி.ஏ.ஓ. ஜெகதீசனிடம் சென்றவர் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்தார்.

Vadipatti PS

நாள்தோறும் தகராறு செய்து வந்த தனது கணவர் ராஜ்குமாரை, தானே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். கேட்டதும் உறைந்து போன வி.ஏ.ஓ. வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்து மஞ்சுளாவை சரணடைய வைத்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதல் கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கணவனை கொலை செய்ததுடன், மஞ்சுளாவும் சிறை சென்றதால் அவர்களின் 3 குழந்தைகளும் நிர்கதியாகியுள்ளனர்.

From around the web