இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்.. மதுரை அருகே கொடூரம்!

 
Madurai

மதுரை அருகே கணவர் வரதட்சனை கேட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (33). இவரது மனைவி செல்வபிரியா (30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சின்னச்சாமி, மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வபிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வபிரியா தனது தந்தை ஊரான மூணாறுக்கு சென்று விட்டார். பின்னர் இரு தரப்பிலும் கலந்து பேசி சமாதானப்படுத்தி செல்வபிரியாவை  கணவன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

Murder

நேற்று முன்தினம் செல்வபிரியாவுக்கும் சின்னசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, செல்வபிரியாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாப்டூர் போலீசார், செல்வபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் சின்னச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர்.

Saptur PS

இதற்கிடையே செல்வபிரியாவின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள், நேற்று மதுரை அரசு மருத்துவமனை பிணவறை அருகே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், செல்வபிரியாவை, கணவர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேர் கொலை செய்து விட்டனர். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதன் பேரில், போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுக்கொண்டனர்.

From around the web