சாலை விபத்தில் இளம் தம்பதி உடல் நசுங்கி பலி.. மங்களம்மேடு அருகே சோகம்!!

 
Mangalammedu

மங்களம்மேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் - மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரபு (29). இவரது மனைவி காந்திமதி (29). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எளம்பலூர் கிராமத்தில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு மின் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.

Accident

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கணவன் - மனைவி இருவர் மீதும் அந்த வாகனம் ஏறிச் சென்றதில் அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார் பிரபு, காந்திமதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mangalamedu PS

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்-மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் எளம்பலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web